ராமநாதபுரம்: இரவு முழுவதும் பெய்ந்த தொடர் கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலை வரை கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அது மட்டுமல்லாமல் குடியிருப்புகளிலும் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதுடன், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
Be the first to comment