வேலூர்: பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டிய கிராமப்புற பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து, தென்னை, வாழை, நெல் போன்ற பயிர்களை சேதப்படுத்துவது கடந்த சில மாதங்களாகவே தொடர்கதையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று குண்டலப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தின் போது காட்டு யானை தென்னங்கன்று ஒன்றை தனது வாயில் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.இதுகுறித்து பேசிய விவசாயிகள், “காட்டு யானைகள் ஊருக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இரவில் யானைகள் வந்துவிடுமோ என அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாங்கள் மன உளைச்சலில் இருந்து வருகிறோம்” என்றனர். தொடர்ந்து பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், “இனி யானைகள் குடியிருப்புகளுக்குள்ளோ, விவசாய நிலங்களுக்குள்ளோ புகாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர் சேதங்களை மதிப்பீட்டு விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்" என்றார்.
Be the first to comment