நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வரும் வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, குன்னூர், உதகை, கூடலூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதிய உணவு கிடைக்காமல் அப்பகுதிகளில் உள்ள வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வதாக கூறப்படுகிறது.கடந்த சில நாட்களாக குன்னூர் பிருந்தாவன் குடியிருப்பு பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் மாயமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.25) இரவு சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனால், ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கூட்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து குன்னூர் வனத்துறையினர் கூறியதாவது, "சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் மற்றும் அதன் கால் தடங்களை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் உறுதி செய்யப்பட்டால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளனர். இருந்தாலும், பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியே வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வளர்ப்பு நாய்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டனர்.
Be the first to comment