தேனி: கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, போடிநாயக்கனூரில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பழனிக்குச் செல்லும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் விக்ரகம் வார்ப்பில் உருவாக்கப்பட்ட, பிரசித்தி பெற்ற போடிநாயக்கனூர் ஐயப்பன் கோயிலில், பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.அதே போல், 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில், பழனி செல்லும் ஏராளமான முருக பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகனுக்கு மாலை அணிந்தனர். கார்த்திகை முதல் தேதி என்பதால் போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் கோயிலில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும், அணைப் பிள்ளையார் கோயிலில் ஏராளமான ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
Be the first to comment