திண்டுக்கல்: கொடைக்கானலில் கடும் குளிரைத் தாங்க முடியாமல் ஒரு சுற்றுலாப் பயணி அணிந்திருந்த குல்லாவை குரங்கு பறித்துக் கொண்டு ஓடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் இயற்கை அழகுக்கும், குளுமைக்கும் பெயர் பெற்றது. கடந்த சில நாட்களாக இங்கு பகலில் அதிக வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட வானிலை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அதே வேளையில், உள்ளூர் மக்களுக்கும் விலங்குகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது.இன்று காலை முதல் கொடைக்கானல் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்ணை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் நிலவியது. வெப்பநிலை குறைந்து, அதிக குளிர் நிலவுவதால், பயணிகள் கம்பளி உடைகள், குல்லா போன்றவற்றை அணிந்து கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள குணா குகைப் பகுதியில் கடும் குளிரைத் தாங்க முடியாமல் ஒரு சுற்றுலாப் பயணி குல்லா அணிந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த குரங்கு ஒன்று திடீரென குல்லாவைப் பறித்துக் கொண்டு ஓடியது. குரங்கு அருகிலுள்ள மரத்தின் உச்சிக்கு ஏறி, குல்லாவைத் தலையில் போட முயற்சித்து, இறுதியில் வெற்றியம் பெற்றது. இந்த காட்சியை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் கண்டு ரசித்தனர்.
Be the first to comment