திருநெல்வேலி: கங்கை கொண்டான் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் எச்சரிக்கையை மீறி குளிக்க சென்ற நபர் ஆற்றில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கங்கை கொண்டான் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலை மீறி, வடகரை நேதாஜி நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கங்கை கொண்டான் சிற்றாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரால் கரை திரும்ப முடியவில்லை. ஆற்றில் சிக்கிய பேச்சிமுத்துவின் கூக்குரல் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.மேலும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து கயிறு கட்டி பேச்சிமுத்துவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, பேச்சிமுத்து பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
Be the first to comment