திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி வருவாயாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் திண்டுக்கல் பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாம் படை வீடாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வருகிற பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக, மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைக் கோயில் வரை பல்வேறு இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்த உண்டியல் காணிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படும். அந்த வகையில், தற்போது உண்டியல்கள் நிரம்பியதால் நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.இதில், ரொக்கமாக 4 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரத்து 257 ரூபாய், 109 சவரன் தங்கம், 33,153 கிராம் வெள்ளி, 1089 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Be the first to comment