மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாநாட்டில் 44 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் தருமபுரம் ஆதீனம் திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27 ஆவது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இவரின் அறுபதாவது மணிவிழாவை முன்னிட்டு கலை இலக்கிய கருத்தரங்க மாநாடு கடந்த 1 ஆம் தேதி துவங்கி நாளை 10 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இன்று 9 ஆம் நாள் கருத்தரங்க மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் தலைமையில் இரண்டு பேருக்கு 80 வயது சதாபிஷேகமும், 15 பேருக்கு 60 வயது மணிவிழா மற்றும் 44 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து ஆதிசைவ அந்தணர்க்கு ஆயிரம் படிக்காசு திட்டத்தின் கீழ் நூறு அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பூஜைக்கான நிதி உதவி ஆயிரம் வழங்கி, திருக்கோயில் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குதல் ஆகிய திட்டத்தை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.இதில் தருமபுரம் ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன், ஜப்பான் சிவ ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ பாலகும்ப குருமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஜப்பான் நாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழா நிறைவடைந்த நிலையில் வெளிநாட்டவருடன் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சேர்ந்து நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
Be the first to comment