கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. அங்கு யானை, காட்டெருமை, பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வருவதும், அவற்றை வனத்துறை அதிகாரிகள் விரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், குப்பிச்சிபுதூர் மேட்டுப்பதி ஒடையகுளம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பவரது தோட்டத்தின் அருகே நேற்று (அக்.27) நள்ளிரவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. அதனை சிசிடிவியில் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி, சிறுத்தை நடமாடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக, வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து வனச்சரகர் பாலமுருகன் கூறுகையில், “வேட்டைக்காரன் புதூர் அருகில் இருக்கும் குப்பிச்சிபுதூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு, வனத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தாலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
Be the first to comment