கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று தென்பட்டதாக மக்கள் தெரிவித்திருந்தனர். அந்த சிறுத்தை தற்போது சாலையில் ஒய்யாரமாக சுற்றிவரும் காணொலிகள் வெளியாகியுள்ளன.எனவே அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் சுழற்சி முறையில் இரவு நேரத்திலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், இரவு நேரத்தில் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் வரவேண்டும் எனவும், சாலையில் வன விலங்குகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி இறங்கி புகைப்படங்கள் எடுக்கவோ, அதை துன்புறுத்துவோ கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த கட்டுப்பாடுகளை மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Be the first to comment