கோயம்புத்தூர்: தமிழக - கேரள எல்லையில் உள்ள சாலக்குடி - அதிரம்பள்ளி சாலை அருகே எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வலம் வரும் காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வால்பாறை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக தமிழக - கேரள எல்லைப் பகுதியான சாலக்குடி - அதிரம்பள்ளி சாலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக முற்றுகையிட்டுள்ளன. அதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து பேசிய வனத் துறையினர், “இன்னும் சில மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க உள்ளது. அதனால், கேரள வனப் பகுதியில் இருந்து அதிக அளவில் யானைகள் வால்பாறைக்கு வரக் கூடும். ஆகவே முன்னேற்பாடுகளாக வாகனங்கள் மூலம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் வனவிலங்குகளை கண்காணித்து வருகிறோம்” என்றனர். கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் காட்டு யானை ’கபாலி’ சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment