திருநெல்வேலி: பருவமழை காரணமாக மணிமுத்தாறு அருவி மற்றும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 118 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், 97 அடியாக உயர்ந்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 118 மில்லி மீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 105 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது. இவ்வாறு பெய்துவரும் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவி மற்றும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் அருவிக்கு வந்தடைவதால் அருவியில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளனர்.மொத்தம் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், நேற்றைய நிலவரப்படி 97 அடியாக உள்ளது. அணைக்கு சுமார் 800 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் பாபநாசம் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
Be the first to comment