தூத்துக்குடி: திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று முதல் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்த திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு அதிமுக, மதிமுக, பாஜக கட்சியினர் போட்டி போட்டு கொண்டு வரவேற்பு அளித்தனர்.மூன்று கட்சி தொண்டர்களும் கோவில்பட்டியில் ரயிலை நிறுத்துவதற்கு நாங்கள் தான் காரணம் என்று மாற்றி மாற்றி கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிமுக, மதிமுக கட்சியினர் மாறி மாறி கெட்டி மேளம் அடித்து, கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து ரயிலில் இருந்த லோகோ பைலட்களுக்கு அதிமுக, மதிமுக, பாஜகவினர் இனிப்பு, கடலை மிட்டாய் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.மூன்று கட்சியினரும் வந்தே பாரத் ரயிலை வரவேற்க ரயில் நிலையத்தில் திரண்டிருந்ததால் எந்தவித பிரச்சனை வராமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே நாகர்கோவில் - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment