வேலூர்: வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (VIT) நடைபெற்று வரும் சர்வதேச அறிவுசார் திருவிழா ‘கிராவிட்டா 2025’ நிகழ்ச்சியில் ட்ரோன் சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த ட்ரோன் ஒளிக்கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய தொழில்நுட்ப அனுபவமாக அமைந்தது. இதில் 175 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வானில் பறக்கவிடப்பட்டு, ஒளியுடன் கூடிய பல்வேறு உருவங்களை வானில் சித்தரித்தன.ட்ரோன் ஷோவில் சக்கரம், புத்தகம், மின்விளக்கு, தொலைதொடர்பு கோபுரம், மனித உடலமைப்புகள், “GRAVITAS” என்ற ஆங்கில எழுத்துக்கள் போன்றவை இருள் சூழ்ந்த வானின் பின்னணியில் ஒளியுடன் காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு வடிவமும் வானில் தோன்றும் தருணத்தில் மாணவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பலர் இந்த அனுபவத்தை தங்கள் வாழ்க்கையில் முதன்முறையாகப் பார்த்ததாக தெரிவித்தனர். இந்த சிறப்புமிக்க நிகழ்வின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.'கிராவிட்டா 2025' என்பது வெறும் அறிவியல் விழாவாக இல்லாமல், மாணவர்களின் படைப்பாற்றலை இணைக்கும் ஒரு மேடை என்பதனை இந்த ட்ரோன் நிகழ்ச்சி நிரூபித்திருக்கிறது. இதுபோன்ற முயற்சிகள், எதிர்கால இந்திய மாணவர்களின் தொழில்நுட்ப கற்பனைகளுக்கு வித்திடும் வகையில் அமைவது உறுதி.
Be the first to comment