கோயம்புத்தூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை நகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.425 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தங்களது கோரிக்கை மீது நகராட்சி ஆணையர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், ”பல வருடங்களாக வால்பாறை நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு கேட்டும் நடவடிக்கை இல்லை. மேலும் தூய்மைப் பணி மேற்கொள்வதற்கு நகராட்சி மூலமாக தற்போது வரை உரிய உபகரணங்கள் தரப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.
Be the first to comment