கோயம்புத்தூர்: திமுக அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜியைக் கண்ட அதிமுகவினர், ‘எடப்பாடியார் வாழ்க.. பாட்டிலுக்கு 10 ரூபாய்’ என கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.கோவையில் உள்ள நீளமான மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (அக்.9) திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். கோவை வந்த அமைச்சர்களை வரவேற்பதற்காக, மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி விமான நிலையம் வந்திருந்தார்.இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர்கள் மற்றும் திமுகவினரைக் கண்ட அதிமுக தொண்டர்கள், “புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க” என கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அந்த கூட்டத்தில் இருந்த சிலர் செந்தில் பாலாஜியைப் பார்த்து “பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பத்து ரூபாய்..” என்ற கோஷத்தை முழங்கியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.இருந்தாலும், அதிமுகவினரின் கோஷத்தை புறந்தள்ளிய திமுக அமைச்சர்கள், எந்தவித சலனமும் இல்லாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து கோவை வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்காமலே அங்கிருந்து கிளம்பினார்.
Be the first to comment