சென்னை: ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்காக பெற்ற தேசிய விருதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை செலுத்தினார்.‘பார்க்கிங்’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செப்.25) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்த எம்.எஸ்.பாஸ்கர், விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து மரியாதை செலுத்தினார். பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து தனது விருதை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார். அப்போது, விருது தொடர்பாகவும், பார்க்கிங் திரைப்பட அனுபவம் தொடர்பாகவும் எம்.எஸ்.பாஸ்கரிடம், பிரேமலதா விஜயகாந்த் கேட்டறிந்தார்.இது குறித்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர், “பார்க்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. இந்த விருதை அண்ணன் விஜயகாந்த் மற்றும் அண்ணி பிரேமலதாவிடம் காண்பித்து ஆசிர்வாதம் பெற்றேன். அத்துடன் எனது தாய், தந்தை, கலைஞர், சிவாஜி ஆகியோரிடமும் ஆசிர்வாதம் வாங்கியுள்ளேன்.விஜயகாந்த் இருந்திருந்தால் இதை பெரிய அளவில் கொண்டாடிருப்பார்கள் என பிரேமலதா தெரிவித்தார். தற்போது, அண்ணன் விஜயகாந்த் ஆன்மா நம்மை ஆசிர்வதிக்கட்டும். இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என உருக்கமாக தெரிவித்தார்.
Be the first to comment