ஈரோடு: ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை பார்த்த காட்டு யானை, லாரியை பின்தொடர்ந்து சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக, தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுயில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது சாலையில் உலா வருவது வழக்கம். இதனால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இவ்வழியாக தினந்தோறும் ஏராளமான லாரிகள் கரும்பு ஏற்றிக்கொண்டு சர்க்கரை ஆலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் வாகங்களை யானைகள் வழிமறித்து கரும்பை சுவைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறும். அந்த வகையில் நேற்று (ஜூலை 20) ஆசனூர் நெடுஞ்சாலையில் சென்ற கரும்பு லாரியை பார்த்த ஒற்றை காட்டு யானை, லாரியை பின்தொடர்ந்து சென்று கரும்பை ருசி பார்த்தது. இதனால், வாகன ஓட்டிகள் யானைக்கு பின்னால் மெதுவாக சென்றனர்.மேலும், யானையை பார்த்து அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ரிவர்சில் சென்று தப்பினர். இதனால், சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், யானையை பின்தொடர்ந்து சென்ற வாகனங்களில் இருந்தவர்கள் இந்த காட்சியை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.