உதகை: விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால், 2026 சட்டமன்றத் தேர்தல் வேற மாதிரி இருக்கும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தின் படபிடிப்பு நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் உருவப் படத்திற்கு விஷால் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், படக்குழுவினருக்கு மதிய உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “நடிகர் விஜயகாந்த் அனைவரையும் சரிசமமாக நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்து வந்தார். அவருடைய வழியில் நானும் இருக்க ஆசைபடுகிறேன். நடிகர் சங்க கட்டடம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் திறப்பு விழா நடத்தப்படும்” என தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், “நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி, இரண்டாவது மாநில மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துகள். விஜய்யாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஒரு வாக்காளராக கேட்டுக் கொள்கிறேன்.ஒருவேளை கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், 2026 சட்டமன்றத் தேர்தல் வேறு மாதிரி இருக்கும். நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன். நிறைய கொடிகளை பார்க்கும் போது வண்ணமயமாக இருக்கிறது. அதேசமயம் வேடிக்கையாகவும் உள்ளது.சமூக சேவை செய்ய இத்தனை கொடிகள், இத்தனை கட்சிகள் இருந்தும் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கேட்கும் பணி நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். அது மட்டுமின்றி, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்,” என நடிகர் விஷால் கோரிக்கை வைத்தார்.