வேலூர்: குடியாத்தம் அருகே உள்ள அனுப்பு கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ள முக்கிய வேளாண் பகுதியாகும். இங்கு 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வேர்க்கடலை பயிரிடப்படுகிறது. இந்த விவசாய நிலங்களில் அவ்வப்போது யானை, மான் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இதனால், அவற்றில் இருந்து நிலத்தை பாதுகாக்க விவசாயிகள் சோலைகாட்டு பொம்பை, பறவைகளை விரட்டும் வகையிலான வெள்ளை துணிகளை நிலங்களில் ஆங்காங்கு வைத்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்றிரவு விவசாய நிலையத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நுழைந்து வேர்க்கடலை செடிகளை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய விவசாயி தர்மலிங்கம், “விவசாயம் தான் எங்களது வாழ்வாதாரம். இந்த ஆண்டு பெரிய நம்பிக்கையோடு வேர்க்கடலை நடவு செய்தோம். ஒரு ஏக்கர் வேர்கடலை நடவு செய்ய ரூ.30,000 வரை செலவாகிறது. இப்போது அறுவடை நேரத்தில் காட்டுப்பன்றிகள் பயிரை முற்றிலும் சேதப்படுத்திவிட்டன. ஒரே இரவில் எங்களது உழைப்பு வீண் போகிவிட்டது. நாங்கள் இப்போது என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. தமிழக அரசு இந்த பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகள் வராதபடி வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
Be the first to comment