கோயம்புத்தூர்: வால்பாறை அருகே ’கொம்பன் கபாலி' எனும் காட்டு யானை சாலையில் உலா வந்தது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இதற்கிடையில், கேரளா வனப்பகுதியில் இருந்தும் ஏராளமான காட்டு யானைகள், கூட்டம் கூட்டமாக வால்பாறை நோக்கி படையெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை, சாலக்குடி, அதிரப்பள்ளி செல்லும் சாலையில் ‘கொம்பன் கபாலி’ என்ற ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை துரத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்து வரும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், பகல் நேரங்களில் சாலைகளில் தொடர்ந்து உலா வருகிறது. அந்த வகையில், நேற்று மீண்டும் சாலக்குடி அருகே உள்ள அம்பலப்பாரா என்ற இடத்தில் உலா வந்த கொம்பன் கபாலி யானை, சாலையோரம் இருந்த மரத்தின் கிளையை உடைத்து சாப்பிட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை, வாகனத்தில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Be the first to comment