கோயம்புத்தூர்: வால்பாறை அருகே ’கபாலி' எனும் ஒற்றைக் காட்டு யானை அரசு பேருந்தை செல்ல விடாமல் சாலையில் மரங்களை இழுத்துப் போட்டு மறித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கேரளா வனப் பகுதியில் இருந்தும் ஏராளமான காட்டு யானைகள், கூட்டம் கூட்டமாக வால்பாறை நோக்கி படையெடுத்து வருகின்றன. தொடர்ந்து யானைகளை வனத் துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து அடர் வனப் பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சாலக்குடி செல்லும் சாலை மழுகுப்பாறை அம்பலபாரா என்ற இடத்தில் வந்த அரசு பேருந்தை செல்ல விடாமல் சாலையில் மரங்களை இழுத்துப் போட்டு ஒற்றைக் கொம்பன் காட்டுயானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் பேருந்து உள்ளே இருந்த பயணிகள் அச்சத்துடன் இருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த கேரளா வனத் துறையினர், அட்டகாசத்தில் ஈடுபட்டயிருந்த ஒற்றைக் கொம்பன் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதை அடுத்து அரசு பேருந்து பத்திரமாக வால்பாறை வந்து அடைந்தது. கடந்த சில தினங்களாக இந்த யானை சுற்றுலா செல்லும் வாகனங்களை தாக்கியும், அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என குறிப்பிடத்தக்கது .
Be the first to comment