புதுக்கோட்டை: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 'கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்' மற்றும் 'ஏழாவது சுற்றுக் கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம்' துவக்க விழா இன்று நடைபெற்றது.திருமலைராயசமுத்திரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாமை துவக்கி வைத்தனர். இதில் நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த அந்த விழாவில் ஒரு சிறுவன் தன் தாயுடன் மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர் அருணா, அந்த சிறுவனை அழைத்து நீ ஏன் இங்கு வந்துள்ளாய்? இன்று பள்ளிக்கு செல்லவில்லையா? என்ன வகுப்பு படிக்கிறாய்? எந்த பள்ளியில் படிக்கிறாய்? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அதைக் கேட்ட அதிர்ந்து போன சிறுவன், ‘எனது பெயர் செந்தமிழ் செல்வன். நான் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றேன். நேற்று மாலை காய்ச்சல் இருந்ததால் இன்று மாலை பள்ளிக்கு செல்லவில்லை’ என்றார். இதை கேட்ட ஆட்சியர் அருணா அங்கிருந்தவர்களிடம் சிறுவன் குறித்து விசாரிக்க கூறினார். மேலும், அவர் சிறுவனிடமும் அவரது தாயாரிடமும் 'பள்ளி சென்று படிப்பது தான் முக்கியம். இந்த வேலையைப் பார்ப்பதற்கு குடும்பத்தில் வேறு நபர்கள் இருக்கிறார்கள்’ என அறிவுரை கூறி, உடனடியாக பள்ளிக்குச் செல்ல வேண்டும், என அறிவுறுத்தினார்.
Be the first to comment