ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். மேலும், அந்த சாலைகளில் கரும்பு லாரிகள் கரும்பு துண்டுகளை வீசியெறிவதால் அங்கு வரும் யானைகள் கரும்பை ருசிப்பதில் படு ஆர்வத்துடன் உள்ளன. இந்நிலையில் இன்று ஆசனூர் இருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை குட்டி யானை சாலையில் உலா வந்தது.அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க தொடங்கின. அப்போது நின்று கொண்டிருந்த வாகனங்களில் கரும்பு உள்ளதா? என குட்டி யானை வழிமறித்து தனது தும்பிக்கையால் செக் செய்து, சிறிது நேரம் சாலையில் உலா வந்தது. இதையடுத்து, ஏமாற்றமடைந்த குட்டி யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. கடந்த சில நாட்களாக இந்த ஒற்றைக் காட்டு யானை சாலையில் உலா வருவதும், வாகனங்களை துரத்துவதும் தொடர் கதையாகி வருவதால் வனத்துறை அந்த ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்