தேனி: வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து இளைஞர்கள் பெட்ரோல் திருடிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி அருகே பங்களாமேடு பகுதியில் சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர். மேலும், அந்த தெருவில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பாட்டில் மூலம் பெட்ரோல் திருடவும் முயற்சித்துள்ளனர். ஆனால் அதிலிருந்து பெட்ரோல் எடுக்க முடியாததால், மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடி சென்றுள்ளனர்.அந்த பகுதியில் இது போன்று சம்பவவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்த போது, நள்ளிரவில் வரும் இளைஞர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடி செல்வது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.