சேலம்: ஏற்காடு மலைப் பாதையில் ஆபத்தான முறையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஸ்கேட்டிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.ஏற்காடு மலை பாதையானது 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த நிலையில், இங்கு ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்தவாறு வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஆபத்தான வளைவுகளை கொண்ட ஏற்காடு மலைப் பாதையில் விபத்து ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும் ஸ்கேட்டிங் செய்தவாறு சென்ற அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை ஏற்காடு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Be the first to comment