தஞ்சாவூர்: கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் தஞ்சை பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் 80.55 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 15 நாட்களே ஆன சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. குறிப்பாக, அம்மாபேட்டை, பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூறு ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரால் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.இடுப்பளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கிய விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாயி செந்தில்குமார், “இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர் வாராததால் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்குகிறது. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
Be the first to comment