வேலூர்: பேரணாம்பட்டு அருகே லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து பிளைவுட் கதவுகளை ஏற்றி வந்த லாரி, இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. இந்த லாரியை ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில், லாரி தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான பத்தலபல்லி மலைப்பாதையின் 2-வது வளைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக லாரி ஓட்டுநரை மீட்டுள்ளனர். விபத்தில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது, பல லட்சம் மதிப்பிலான பிளைவுட் கதவுகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இருந்தாலும், லாரி ஓட்டுநர் பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், லாரி பெங்களூரிலிருந்து சென்னைக்கு பிளைவுட் ஜன்னல் கதவுகளை ஏற்றிக்கொண்டு வந்தது என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, லாரியை பள்ளத்திலிருந்து போலீசார் மீட்டனர். இதனால், பேரணாம்பட்டு - வி.கோட்டா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Be the first to comment