தேனி: கனமழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணைகள் நிரம்பி வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால், சுருளி அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவும், குளிக்கவும் கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கம்பம் வழியாக செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Be the first to comment