வேலூர்: தொடர் கனமழையால் அக்ராவரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி, தண்ணீர் செல்ல வழி இல்லாததால் சாலைகள் வழியாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக நீடித்த மழையால், குடியாத்தம் அருகே உள்ள மோர்தனா அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையிலிருந்து நாள்தோறும் சுமார் 4000 கனஅடி தண்ணீர் வெளியேறி, கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாக நெல்லூர் பேட்டை, அக்ராவரம், எர்த்தாங்கல், பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பியுள்ளது. இந்த நிலையில், அக்ராவரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி, உபரி நீர் செல்ல வேண்டிய பாசன கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் செல்லும் வழி தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்கள், சாலைகள் வழியாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால், அக்ராவரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சிலர் தங்களது வீடுகளைத் தற்காலிகமாக விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அக்ராவரம் ஊராட்சி மன்றத் தலைவர், உடனடியாக கனரக இயந்திரம் மூலம் பாசன கால்வாய்களை தூர்வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளார். மேலும், தண்ணீர் வழிமாறி செல்லும் பாதைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
Be the first to comment