தேனி: விவசாய பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லப்பட்டி கிராமத்தில் வயல் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லப்பட்டி கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.எல்லப்பட்டி கிராமப் பகுதியில் விவசாயம் நிலத்திற்கு அருகிலுள்ள நெல் களத்தில் மின் மயானம் அமைத்தால் மின் மயானத்தில் இருந்து வரும் புகையினால் அப்பகுதி மாசுபட்டு விவசாய நிலம் பாதிப்படையும் எனக்கூறி எல்லப்பட்டி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மனு அளித்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி பேரூராட்சி நிர்வாகத்தினர் எல்லப்பட்டி பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு பணிகள் துவங்கியதாக தெரிகிறது.இதை அறிந்து ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் தங்கள் ஊரில் இருந்து "வேண்டாம் வேண்டாம்" "மின் மயானம் வேண்டாம்" என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மீண்டும் ஒரு மனுவாக எழுதி பேரூராட்சி செயலரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயலாளர் அந்த இடத்தில் மின் மயானம் அமைக்க மாட்டோம் அதற்கு பதிலாக புதிதாக இடம் தேர்வு செய்து அங்கு மின்மயானம் அமைத்துக் கொள்கிறோம் என்று உறுதி அளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.
Be the first to comment