திருவாரூர்: தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு காப்பை நகைக் கடையில் விற்று விட்டு கம்போடியாவிற்கு தப்பிச் சென்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள தேவராஜ் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி மதியம் கூத்தாநல்லூர் அருகில் உள்ள பாண்டுக்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் (32) என்பவர் தன்னிடம் உள்ள நான்கு சவரன் தங்க காப்பை விற்க வேண்டுமென வந்துள்ளார்.இதனையடுத்து பிரகாஷ் விஜய் கொண்டு வந்திருந்த காப்பை சோதனை செய்து விட்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை பெற்றுக் கொண்டு அவருக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து பிரகாஷ் பத்து நாட்கள் கழித்து இந்த நகையை உருக்கிய போது அது முழுவதுமாக இரும்பு காப்பு என தெரிய வந்தது. இதனையடுத்து கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் பிரகாஷ் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது விஜய் தங்க முலாம் பூசிய இரும்பு காப்பை விற்பனை செய்ததும், விற்பனை செய்த ஒரு வாரத்தில் அவர் கம்போடியா நாட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது. கம்போடியாவில் ஏற்கனவே விஜய்யின் சகோதரர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கூத்தாநல்லூர் காவல்துறையினர் அவர் மீது மோசடி 420 & 406 உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Be the first to comment