செங்கல்பட்டு: தமிழ் கடவுளான முருகனை போற்றும் விதமாக கந்த சஷ்டி பெருவிழா கொண்டாடப்படுகிறது. ஒரு வார காலம் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வர். இந்த ஆண்டு இவ்விழாவானது இன்று (அக்.22) முதல் வருகிற அக்.27 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் (இன்று) முதல் நாள் விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கொடியேற்ற நிகழ்வுடன் கந்த சஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி முருகன் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையேற்று செய்துள்ளார். அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு பரவசம் அடைந்தனர். தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகன தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வருகிற 27ஆம் தேதி மாலை நடைபெறும். அதனையடுத்து 28ஆம் தேதி மாலை முருகன் தேவயானிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Be the first to comment