கேரளா (இருக்கி): கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும், அணைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கரையோரம் வசித்து வரும் மக்களுக்கும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, இடுக்கி மாவட்டம் அடிமாலி பணம்குட்டி பகுதியில் உள்ள சப்பாத்து பாலத்தில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த பாலத்தின் வழியாக ஒருவர் இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்த நிலையில் இருசக்கர வாகனம் வெள்ளப்பெருக்கில் சிக்கியது. இதையடுத்து இரு சக்கர வாகனத்தை எடுக்க ஓட்டுநர் முயற்சி செய்தும், முடியாததால் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் அங்கிருந்து தப்பித்து ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.