தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஸ்ரீவைகுண்டம் அணையில் இரண்டு இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதும், யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் இரண்டு பேரும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கும், புதுப்பாலத்திற்கும் இடையே இருந்த மண் திட்டில் ஏறி தப்பினர். ஆனால் மணல் திட்டை சுற்றி சுமார் 6 அடி உயரத்திற்கு வெள்ளநீர் பாய்ந்தோடி கொண்டிருந்தது. இதனால் தண்ணீரை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாலம் வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் இருவரும் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி இருவரையும் மீட்டனர்.
Be the first to comment