நீலகிரி: தமிழகத்தின் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் நீலகிரி. சமீப காலமாக வனப்பகுதிக்குள் உள்ள புலிகள், சிறுத்தைகள், கரடி, யானை, பாம்பு போன்ற விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.உதகையில் மேரிஸ் ஹில் என்னும் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு கரடி ஒன்று உணவு தேடி அப்பகுதிக்கு வந்துள்ளது. முதலில் சாலையில் நடந்து சென்ற கரடி சிறிது நேரத்தில் அருகில் இருந்த தனியார் பள்ளியின் தடுப்பு சுவர் மீது ஏறி அங்கும், இங்கும் அலைந்தது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், “இரவு நேரங்களில் எங்கள் பகுதிக்குள் கரடி உலா வரும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. தற்போது தனியார் பள்ளி சுவரில் ஏறி அலைந்துள்ளது. அதனை பார்க்கவே பயமாக உள்ளது. இதே போல், காலை நேரங்களில் பள்ளியில் மாணவர்கள் இருக்கும்போது கரடி வந்தால் என்ன செய்வது. வனத்துறையினர் நிலைமையின் தீவரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Be the first to comment