செங்கல்பட்டு: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஹெல்மெட் அணியாமாலும், மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மடக்கி பிடித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வம் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பினர்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரி நான்கு முனை சந்திப்பு பகுதியில் இன்று மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், இரு சக்கர வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணியாமலும், மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களை மடக்கிப் பிடித்து அங்கு நடுரோட்டில் பள்ளி மாணவர்களை போல் வரிசையாக நிற்க வைத்தார்.அதனைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர் என்றும், பலர் மூளைச்சாவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று பல மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்றும், அதனால் இறந்தவர்களின் குடும்பங்கள், அவர்களின் மனைவிகள், குழந்தைகள், எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்று ஒரு ஆசிரியர் போல் பாடம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். மேலும், அவரிடம் பிடிபட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள், இனி ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவதாக கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Be the first to comment