திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெளுத்து வாங்கும் கனமழையால் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான, விண்ணமங்கலம், மின்னூர், சான்றோர்குப்பம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பணிக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.மேலும், மின்னூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் செல்லும் நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் மழைநீரில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், தொடர் மழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி விடுமுறை அறிவித்துள்ளார். இந்த தொடர் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுவதால், நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Be the first to comment