கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் பட்டாசு வடிவில் தயார் செய்யப்பட்டு விற்கப்படும் இனிப்பு வகைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.தீபாவளி பண்டிகை அக்.20 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, இனிப்பு வகைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.அந்த வகையில், பண்டிகை காலங்களில் விதவிதமான ஸ்வீட் வகைகளை தேடித் தேடி வாங்கும் இனிப்பு பிரியர்களை கவரும் வகையில், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பட்டாசு வடிவ இனிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராக்கெட், சங்கு சக்கரம், புஸ்வானம், லட்சுமி வெடி என பல தரப்பட்ட பட்டாசு வடிவிலான இனிப்பு வகைகளை விற்பனைக்காக வைத்துள்ளனர்.இனிப்பு வாங்க வரும் வாடிக்கையாளர்களை அந்த பட்டாசு இனிப்புகள் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, சாதாரண இனிப்பு வகைகளுக்கு மத்தியில் இந்த சரவெடி பட்டாசு இனிப்பு வகைகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளதாகவும், விற்பனை அமோகமாக உள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Be the first to comment