தூத்துக்குடி: கபடி வீரர் மனத்தி கணேசனுக்கு பயிற்சியளித்தவரை நேரில் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ், அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ காளை மாடன் (Bison). மனத்தி கணேசன் என்ற கபடி வீரரின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும், தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள கபடி வீரர் கதாபாத்திரம், உண்மையிலேயே திருச்செந்தூர் அருகே உள்ள மனத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் வாழ்க்கை வரலாறு. இந்த நிலையில், மனத்தி கணேசனுக்கு ஊக்கமளித்த கபடி பயிற்சியாளர் தங்கராஜை நேரில் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவருக்கு நன்றி தெரிவித்தார்.இதற்காக, திருச்செந்தூர் அருகே நகனை கிராமத்தில் உள்ள தங்கராஜ் வீட்டிற்கு சென்ற மாரி செல்வராஜ், அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். அவருடன் கபடி வீரர் மனத்தி கணேசனும் தனது பயிற்சியாளருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Be the first to comment