திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே பட்டபகலில் இருசக்கர வாகனத்தை வாலிபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். காயம் அடைந்த வாலிபரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணை செய்ததில் அவர், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (28) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அந்த வாலிபரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பைக் திருடன் நடித்ததால் போலீசார் அவரை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதனை அறியாமல் இருந்த வாலிபர், விட்டால் போதும் என்று காவல் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். அவரை கண்டதும் போலீசார் பின்னாலேயே ஓட்டம் பிடித்த நிலையில், சாலையில் இருந்த பொதுமக்கள் திருடனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு, அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.