நீலகிரி: காட்டெருமை கூட்டத்தை வீடியோ எடுத்த நபரை காட்டெருமை ஒன்று துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். இதன் வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் உணவு தேடி வன விலங்குகளான காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்றவை அவ்வப்போது ஊருக்குள் வருவதாக கிராம மக்கள் வனத்துறைக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், உதகை கூடலூர் செல்லும் சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகளில் ஒருவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது அதனை பார்த்த காட்டெருமைகள் வீடியோ எடுப்பவரை ஆக்ரோஷமாக விரட்ட தொடங்கியது. பின், அதனிடம் இருந்து தப்பிக்க அந்த நபர் அருகில் இருந்த ஆட்டோவுக்குள் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், முதியோர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அப்பகுதியில் தினமும் செல்லும் நிலையில், இவ்வாறு காட்டெருமைகள் வருவதால் மக்கள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், வனத்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Be the first to comment