கோயம்புத்தூர்: வால்பாறை அருகே சாலையில் உலா வந்த ஒற்றை கொம்பன் கபாலி யானையின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, வால்பாறை பகுதியிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவு வனப்பகுதிக்கு சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை, சாலையில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை ஒன்று விரட்டுவதும், அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். அப்போது பெருங்கல் குத்து என்ற இடத்தில் கபாலி யானை ஒன்று சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. யானையைக் கண்ட வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வாகனங்களை நிறுத்தி, அச்சத்திலிருந்தனர். அப்போது வந்த கபாலி யானை வாகன சோதனையில் ஈடுபடுவது போன்று, ஒவ்வொரு வாகனமாக பார்த்து விட்டுச் சென்றது.இதற்கிடையே, காருக்குள் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்த யானை, அவரை சில நொடிகள் முறைத்துப் பார்த்து விட்டு, பிறகு அங்கிருந்து நகர்ந்து சென்றது. நல்வாய்ப்பாக யானை காரில் இருந்தவர்களை ஒன்றும் செய்யாமல் சென்றதால், அவர்கள் பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், யானை உலா வரும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
Be the first to comment