கன்னியாகுமரி: மர்ம நபர்களால் எம்.ஜி.ஆர் முழு உருவ சிலை உடைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் சந்திப்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலை 1995ஆம் ஆண்டு அப்பகுதியில் நிறுவப்பட்டது. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலமாக அந்த சிலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர் சிலையின் இடது கை பகுதியை இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர். இதனையடுத்து, இன்று காலை சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது.இதனை அறிந்த கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் மற்றும் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர், சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.தகவல் அறிந்த வடசேரி காவல் நிலைய போலீசார் நாகர்கோவில் ஏ.எஸ்.பி லலித் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Be the first to comment