வேலூர்: கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 75 சதவீத ஏரிகள் தற்போது முழுமையாக நிரம்பி வழிகின்றன. கால்வாய்களின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநில முழுவதும் உள்ள ஏரிகள், அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏரிகள் மழைநீரால் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அந்த அணையில் உள்ள உபரி நீர், கால்வாய்களின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, நெல்லூர்பேட்டை – லிங்குன்றம் பகுதியில் உள்ள கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரவு சுமார் 10 மணியளவில் அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.அங்குள்ள மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு பள்ளியில தங்க வைக்கப்பட்டுள்ளனர். கால்வாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், ஜே.சி.பி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலமாக உடனடி சரி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய்களில், சில இடங்களில் சிறிய உடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு பழுது சரிசெய்யப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டிருப்பதால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், “கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.
Be the first to comment