தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்றாகும். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. தேரோட்டதினை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. விழாவின் 10-ம் நாள் திருவிழாவான இன்று சரியாக 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய திருத்தேர் கீழரதவீதி, மேலரத வீதி, வடக்கு மற்றும் தெற்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என்று கோஷம் முழங்க திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மூன்றாவதாக வள்ளியம்மன் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கபட்டது.
Be the first to comment