தேனி: உரிய விலை கிடைக்காத விரக்தியில், கிலோ கணக்கிலான தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காய்கறி சந்தையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விளைச்சல் செய்யப்பட்ட தக்காளி, ஆண்டிபட்டி காய்கறி சந்தைக்கு எடுத்து வரப்பட்டு, ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சமீபகாலமாக ஆண்டிபட்டி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.35 வரை விற்கப்பட்ட தக்காளி, தற்போது 10-ரூபாய்க்கு விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.பல மாதங்களாக விவசாய நிலங்களில் கூலிக்கு ஆட்களை வைத்து விளைச்சல் செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோ 10-ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் கூலி ஆட்கள், வண்டி வாடகை, ஏற்று இறக்கு கூலி உள்ளிட்டு அடிப்படை செலவுக்கு கூட போதுமானதாக இல்லை என தெரிவிக்கும் விவசாயிகள், கிலோ கணக்கிலான தக்காளிப் பழங்களை சாலையோரங்களிலும், குப்பைகளும் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து அதிகரித்தனாலும், முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள் என எதுவும் இல்லாததும் தக்காளி விலையின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. ஆகையால், விவசாயிகள் விளைவிக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளனர்.
Be the first to comment