திருநெல்வேலி: மணிமுத்தாறு பட்டாலியனில் நடந்த குடியரசு தின விழாவில் மூதாட்டி ஒருவர் பாடலை பாடி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தார்.நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணியின் தளவாய் கார்த்திகேயன் தலைமையில் 77-வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. தளவாய் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு வழங்கப்படும் முதலமைச்சர் காவலர் பதக்கத்தை 4 காவலர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். பின்னர் சுதந்திர போராட்ட தியாகி அனந்தகிருஷ்ணன் என்பவரின் மனைவியான சீதா என்ற மூதாட்டியை மேடைக்கு அழைத்து தளவாய் கார்த்திகேயன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து கௌரவித்தார். அப்போது மேடையில் திடீரென மூதாட்டி சீதா பாடல் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். மூதாட்டியின் இந்த செயல் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Comments