தேனி: தமிழக - கேரள எல்லையான குமுளி மலைப்பாதையில் சுற்றுலா வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரையிலிருந்து கேரளா மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டெம்போ ட்ராவலர் வேன் இன்று காலை குமுளி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தினை மதுரை பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்ற ஓட்டுநர் ஓட்டிச் செல்ல ஆண், பெண் என 12 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வாகனம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து குமுளி நோக்கி செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, உள்ளே இருந்த பயணிகளை விரைவாக இறங்குமாறு அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ வேன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மேலும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது மலைப்பாதையில் இன்ஜின் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து நேரிட்டதா? என்பது குறித்து குமுளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments