சென்னை: பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களை நியமித்துள்ளார் என சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் இயங்கி வரும் சென்னை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கும் படி சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷிடம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினரின் முயற்சி காரணமாக சென்னை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளியின் வளாகத்தில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் கட்டடம் கட்ட அடிகல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் பள்ளியை ஆய்வு மேற்கொண்ட அவர், கழிவறையின் மோசமான நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து துர்நாற்றம் வீசுவதாகவும், பாத்ரூமை இப்படித் தான் நாற்றம் வீசும் அளவிற்கு வச்சிருப்பீங்களா? ஆட்களை வேலை வாங்குறீங்களா? இல்லையா? சுத்தம் செய்ய ஆட்கள் போட்டும் சுத்தம் செய்யாமல் ஏன் வைத்துள்ளீர்கள்? என தலைமை ஆசிரியரை லெப்ட் ரைட் வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Be the first to comment